திருச்சி: இலங்கையைச் சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், முகமது யாமின், கோட்டா காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ, தனுக்கா ராஜன், லாடியா, வெள்ள சாரங்கா, திலீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இச்சிறப்பு முகாமில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்ததில் அவர்கள் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சமீப காலமாக இலங்கை மற்றும் லட்சத்தீவுகளில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று கேரள தேசிய புலனாய்வு முகமை எஸ்பி தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 9 பேரை கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரினார்.
முறையான ஆவணங்கள் 9 பேருடைய முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டிருந்தார். நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் தேசிய புலனாய்வு முகமை எஸ்பி தர்மராஜ், திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு சென்று 9 பேரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி அழைத்து செல்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படங்க: பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது!