நாடு முழுவதும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருச்சி டாக்டர் அப்துல்கலாம் பொதுமக்கள் நலன் சங்கம் சார்பாக, வயலூர் ரோடு, குமரன் நகர், சிவன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் குறித்து பேசிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், கபசுரக் குடிநீர் என்பது சாதாரண மருந்து. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் கூறிய அருமருந்துகளில் ஒன்று. ஓலைச்சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மகத்துவம் புரிந்து தற்போது பல புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் அருமருந்தாக தற்போது தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது.
நுரையீரல் தொடர்பான நோய்களான, சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவைக்கு இந்த மருந்து மிகவும் முக்கியமானது. இந்த கபசுரக் குடிநீரில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் உதவியது போன்று, கபசுரக் குடிநீர் அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஒன்று முதல் இரண்டு கிராம் கபசுரக் குடிநீர் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, வடிகட்டி பெரியவர்கள் 60 மிலி, குழந்தைகள் 30 மிலி காலை வேளைகளில் பருகலாம்.
கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குடிநீரை பருகலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இந்தக் குடிநீர் உடலுக்கு நோய்த் தடுக்கும் மருந்தாக உள்ளது. இந்தக் குடிநீரினை ஆங்கில மருந்து உண்பவர்களும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
இந்த மருந்து வெளிச்சந்தையில் 100 கிராம் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பல போலியானவையாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும் மருந்தினை பயன்படுத்தலாம் எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள், அப்துல் கலாம் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் - முதலமைச்சர் அறிவுறுத்தல்