திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 2) மாலை பாலக்கரை, காஜா கடைசந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் வி.எம். பாரூக், தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் மவ்லவி உமர் பாரூக், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன் ஆகியோர் பங்கேற்றனர்.
கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், "திருச்சி மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு வார்டுகள் கேட்கப்பட்டன. அதேபோல், திமுக கூட்டணியில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதிலும் இரண்டு வார்டுகள் கேட்கப்பட்டன. ஆனால் கேட்ட வார்டுகள் திமுக கொடுக்கவில்லை.
மேலும், வருகிற திருச்சி மாநகராட்சி, தெற்கு மாவட்டத் தேர்தல் ஆகியவற்றில் எந்தவித உடன்பாடுகளும் ஏற்படவில்லை. ஆகையால் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், திருச்சி மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்தார். இதுவரை காங்கிரஸ் கூட்டணியும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இரண்டு அடையாள அட்டைகளுமே அவசியம்' - வாக்குச்சாவடி முகவர்களுக்குப் புதிய உத்தரவு!