தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆப்தீன் தலைமையில் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் ஆல்ஃபா நசீர், மாநில செயலாளர் அப்துந் நாசிர், பாகவி பொதுச்செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,
“இஸ்லாமியர்கள் குர்ஆன் நபிமொழிகள் ஆகியவற்றை மட்டுமே பின்பற்றி வாழ வேண்டும். இதற்கு எதிரான தர்கா வழிபாடு, தரீக்கா, முரீது, மல்லூது, மத்ஹபு மற்றும் தாயத்து, தகடு, பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளையும், சூது, மது, விபசாரம், போதைப் பொருட்கள் போன்றவற்றையும் கைவிட வேண்டும்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி திருச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் முறையை தவிர்த்து வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு வட்டியில்லாத நீண்டகால கடன் உதவிகளை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வீட்டு உபயோக சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால் பொதுவாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் லவ் ஜிகாத் என பயன்படுத்தப்படும் வார்த்தையை உடனே மாற்றி அமைக்க வழிவகை செய்யவேண்டும்.
கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாட்டில் 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜக - ஓவைசி சாடல்!