திருச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்பொழுது பேசிய அவர், 'கடந்த எட்டு ஆண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. கடந்த 2014 முதல் வீடற்ற ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும். கடந்த 2014ஆம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 ஜிகா வாட் ஆக இருந்த நிலையில் தற்போது 53 GWஆக உயர்ந்துள்ளது.
7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்: கரோனா காலகட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார் ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. 2018 முதல் 2022 வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014க்குப் பிறகு தமிழ்நாட்டில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு வரப்பட்டுள்ளன.
மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸ், திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாடு காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. இதுவரை காணாத ஊழலை, இனி வரும், 2 ஆண்டுகளில் தமிழ்நாடு காணப்போகிறது. திமுக ஊழல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கென்றே தனி டோல் ஃபிரீ நம்பரை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம்.
'மோடியால் தான் கரோனா அலை ஏற்படவில்லை': பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல. இந்தியாவில் கரோனா, 3வது, 4வது, 5ஆவது அலை ஏற்படாததற்கு காரணம் மோடி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம்.
கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை- முன்னேற்றம்- ஏழைகளுக்கான ஆட்சி. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட, 228 புராதன சிறப்பு வாய்ந்த சிலைகளை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வந்துள்ளோம். ’முத்தலாக்’ தடை செய்ததன் மூலம், 82 விழுக்காடு முத்தலாக் விவாகரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வெயில் மற்றும் காற்றின் சக்தியைப் பெறுவதில் உலகளவில் இந்தியா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை. அதை அவர் படித்து இருக்கிறாரா? என்று தெரியவில்லை. வேண்டுமானால், இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். இன்று முதல் வரும் ஜூன், 15ம் தேதி தேதி வரை பாஜக விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
பின்னர் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’சசிகலாவை பாஜகவில் இணைப்பது குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து. பாஜகவின் கருத்து இல்லை. பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். குறிப்பிட்ட சிலர் (சசிகலா) இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும்’ எனத் தெரிவித்தார்.
அதிமுக பொன்னையன் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் அதிமுகவிற்கு ஆபத்து என கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, எந்த கட்சி தலைவரும் அவரவர் விருப்பங்களைத் தெரிவிக்கலாம். தன்னுடைய கட்சி முதல் நம்பர் ஒன் கட்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. இது அவருடைய தனிப்பட்ட கருத்து.
பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 8 வாக்கு வளர்ச்சி விகிதம் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மடைதிறந்த வெள்ளம்போல் பாஜக வளர்ச்சி இருக்கும். 25 எம்பிக்களை பாஜக தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும்’ என்றார்.
இதையும் படிங்க: 'அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, பக்குவமும் கிடையாது' - செந்தில் பாலாஜி விமர்சனம்