திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிகண்டம் ஊராட்சி தலைவராக திமுக வேட்பாளரான ஜான்சி திவ்யா வெற்றிபெற்றார். இவரது கணவர் சகாயராஜ் என்கிற சின்னதம்பி என்பவரும் திமுகவைச் சேர்ந்தவர். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பிரமுகரான மூக்கன் என்பவரது மருமகள் விசித்ரா தோல்வியடைந்தார்.
இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி அருகே நடைபெறும் ரிங்ரோடு பணிக்காக அதன் ஒப்பந்ததாரர் சார்பில் திருமலைசமுத்திரம் குளத்திலிருந்து டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஓலையூர் மெயின் ரோடில் அதிமுக பிரமுகரான மூக்கன் உள்ளிட்ட 20 பேர் லாரியை மறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவி ஜான்சி திவ்யா, அவரது கணவர், தலையாரி மணி ஆகியோர் அங்கு சென்று தட்டிக் கேட்டனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மூக்கன் தலைமையிலான கும்பல் ஜான்சி திவ்யா, அவரது கணவரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்து தப்பிவந்த ஜான்சி திவ்யா, அவரது கணவர் ஓலையூரில் உள்ள முடிகண்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
அலுவலகத்தின் கதவை பூட்டிக் கொண்டு இருவரும் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கணவன், மனைவி இருவரும் இரவு உணவை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜான்சி திவ்யாவின் தரப்பு ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: 'டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!