திருச்சி: நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 'ரோஸ்கர் மேளா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக 71,000 பேருக்கு பல்வேறு அரசுத்துறைகளில் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 13) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருச்சியில் நடைபெற்ற விழாவில், 243 பேருக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ரயில்வே, அஞ்சல், உயர் கல்வி உள்ளிட்டத் துறைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, SRMU துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் அஜய் பட், "மத்திய அரசு தொடர்ந்து வேலை வழங்கும் பணியை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு தொழில் முனையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஸ்டார்ட் அப் திட்டமும் தொடர்கிறது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மட்டுமே நமது இளைஞர்கள் நம்பி இருந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.
முன்பெல்லாம், இந்தியா மற்ற நாடுகளை நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவை மற்ற நாடுகள் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, 25வது இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இது சுய சார்பு இந்தியா என்பதற்கான வலிமையை சேர்க்கிறது. ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்தது. ஆனால், அதையும் தாண்டி, இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் பிரதமர் மோடி வைத்துள்ளார்" என்றார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் இணை அமைச்சர் அஜய் பட் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி