திருச்சி: மாங்கல்ய பலம் வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும் ஆலமரத்துக்கு கயிறு கட்டி வழிபாடு செய்த வட மாநில பெண்கள். திருச்சியில் பொன்மலையில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் வட சாவித்திரி விரதமிருந்து ஆலமரத்துக்கு கயிறு கட்டி வழிபட்ட பெண்கள்.
இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவன் மற்றும் பிள்ளைகள் ஆயுள் ஆரோக்கியத்திற்காக மட்டும் தான். வட சாவித்திரி பூஜை என்பது இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இந்த பூஜையில் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இந்த விழாவானது வெகு விமர்சையாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு இனிய கணவன் அமையவும், திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகவும் கன்னி பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் இந்த நிகழ்வு தமிழக பகுதிகள் காரடையான் நோன்பு என கடைபிடிக்கப்படுகிறது.
கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வழிபடுவதால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்றும் மனதுக்கு பிடித்தமான கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் பெண்கள் விரதம் இருந்து ஆலமரப் பூக்களை சாப்பிடுவார்கள்.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானாவில் வைகாசி மாத அமாவாசை தினங்களில் வட சாவித்திரி பூஜை வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் வைகாசி மாத பவுர்ணமி தினத்திலும் வட சாவித்திரி பூஜை கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி திருச்சி பொன்மலையில் வசிக்கும் வட மாநில பெண்கள் பொன்மலை ரயில்வே தொழிற்சாலை ஆர்மரி கேட் எதிரே உள்ள கோவில் ஆலமரத்தில் மங்களப் பொருட்கள் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் ஆலமரத்தை சுற்றிலும் கயிறு கட்டி தங்கள் கணவன் நீடுழி வாழ வேண்டி வழிபாடு மேற்கொண்டனர்.
மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கு ஒருவர் நெற்றியில் குங்கும திலகம் இட்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,000 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி அந்த பகுதியில் உள்ள ஆலமரத்துக்கு கயிறு கட்டி வினோத பூஜையில் ஈடுபட்டு வந்தது காண்போரை வியக்க செய்தது.
இதையும் படிங்க: வைகாசி மாத அமாவாசை: கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை!