திருச்சி மாவட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அதில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின் ஊராட்சித் தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டு, கணினி முறை மூலம் பணப்பரிவர்த்தனை, அதுவும் மூன்றாம் நபருக்கு வங்கிகள் மூலம் தொகை வழங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
உடனுக்குடன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு வர மறுக்கிறார்கள். இதனால் குடிநீர் வழங்குதல், சாக்கடை சரி செய்தல் போன்ற அத்தியாவசிய பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக தொகை வழங்கினால்தான் பழுது பார்க்கும் பணிக்கு வருவோம் என்று ஊழியர்கள் கூறுகின்றனர். அரசின் புதிய உத்தரவால் பணப்பரிவர்த்தனையை ஊராட்சித் தலைவர்கள் செய்ய முடியாத நிலை உள்ளது.
2016ஆம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் நேரடியாக பணப் பட்டுவாடா செய்துவந்தனர். அதனால் எந்த பணிகளும் தாமதமின்றி நடைபெற்று வந்தது. வங்கிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்வதால் பணிகள் உடனுக்குடன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், “ஆன்லைன் மூலமான பரிவர்த்தனை திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்தது. அதனால் அந்தச் சட்டத்தை மாற்ற இயலாது. எனினும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதற்காக வங்கிக் கணக்குகளை செயல்படுத்த நாளை மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தெரிவித்தால் சீர் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் ஒழுங்காக செயல்பட வேண்டும். அனைவரும் ஒழுங்காக செயல்பட்டால் நானும் ஒழுங்காக இருப்பேன். நீங்கள் வேறு மாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரி செயல்படுவேன்” என்றார்.
இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு