ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியில் செயல்பட்டு வந்த காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக திருச்சி கீழப்புலிவார்டு ரோடு மதுரம் மைதானம், திருச்சி தென்னூர் உழவர் சந்தை, இ.ஆர். மேல்நிலைப் பள்ளி மைதானம், அரியமங்கலம் எஸ்ஐடி பாலிடெக்னிக், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி, அண்ணா விளையாட்டு அரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கேகே நகர் உழவர் சந்தை, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பத்து இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
அந்தந்த பகுதி மக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு நாளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். இந்நிலையில் திருச்சியில் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக காய்கறி சந்தைகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விடுமுறை அளித்து வருகிறார்.
இந்த வகையில் வரும் 25 , 26 ஆம் தேதிகளில் மாநகரில் 10 இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து காய்கறிக் கடைகளுக்கு 26ஆம் தேதி மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே அமைச்சகம் சார்பில் தினந்தோறும் 2.6 லட்சம் உணவுப் பொட்டலங்கள்!