திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணியில் பொறுப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார்.
அப்போது, நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், குடும்பத்தார் திடீரென விழித்துப் பார்த்தபோது ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன.
பின்னர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக வெளியே ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இது குறித்து சக்திவேல் சோமரசம்பேட்டை காவல் துறையில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் குவிந்தனர்.
மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகள், சக்திவேலின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்து முன்னணியில் ஒன்றிய பொறுப்பிலுள்ள சக்திவேல், மாவட்ட அளவிலான பதவியைப் பெறுவதற்காகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தனது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டு, வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாடகமாடியிருப்பது, காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தச் சமயத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் மாநில அளவில் தன்மீது கட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று திட்டமிட்டு இத்தகைய செயலில் சக்திவேல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சக்திவேல், இவரது நண்பரான மற்றொரு சக்திவேல், முகேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மது போதையில் காவலரை மிரட்டிய இளைஞர்கள் - வைரலாகும் காணொலி