திருச்சி மாவட்டம் துவாக்குடி, அண்ணா வளைவு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கடையை நேற்று முன் தினம் இரவு, பணி முடிந்து ஊழியர் கடையை அடைக்கும்போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து கடை ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி கடையில் இருந்த பணத்தை எடுக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
அப்போது ஊழியரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் கொள்ளையர்கள் இரண்டுபேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனையடுத்து, துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறை ஆய்வாளர் காந்திமதி தலைமையில் நேற்று காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர், விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த செபாஸ்டியன் (28), முருகன் (29) என்பது தெரியவந்தது. மேலும் இருவர் மீதும் நாங்குநேரியில் நான்கு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை வழக்குகள் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இருவரும் சமீபத்தில்தான் பாளையங்கோட்டை சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த தகவலும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ‘படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?’ - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி