திருச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் குமரவேல், லட்சுமணன், முகமது அலி ஜின்னா, சோமசுந்தரம், மகாவிஷ்ணன், துளசி ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மாநிலச் செயலாளர்கள் சாமி குணம், ராஜசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறிய மாநிலத் தலைவர் தமிழ்செல்வி, "தமிழ்நாடு அரசு புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மாநில தலைவர் மீதான தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையை காரணம் காட்டி அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், வட்டி விகித குறைப்பு போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும்.மதிப்பூதியம், தொகுப்பு ஊதியம் பெறக்கூடிய அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள், நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து அனைத்து துறை ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.பொங்கலுக்கு போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 30ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதேபோல் சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடத்தப்படும்.இதன் பின்னரும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென்றால் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காலியாக உள்ள 4 லட்சம் அரசுப் பணியிடங்கள்!