திருச்சி: துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளின், உடமைகளைச் சோதனை செய்யும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட இருவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர்.
தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருவரும் உடலில் மறைத்து தங்கம் கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 59 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 250 கிராம் கடத்தல் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
தொடர் விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ், கண்ணன் எனத் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் தங்கத்தைக் கொடுத்து அனுப்பியது யார், யாருக்காகத் தங்கத்தைக் கடத்திவந்தனர் என அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பா? - சு. வெங்கடேசன் கண்டனம்