திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ள வேண்டும். மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது, இறப்பவர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்து, அரசு பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடந்தால் அதற்கு அதிமுக அரசு தான் காரணமாக இருக்கும். அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது.
இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி அமைக்கும். வருகின்ற 22ஆம் தேதி திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால் அதை திசை திருப்பும் வகையில் தேர்தல் ஆணையர் மாற்றத்தை விமர்சனம் செய்கின்றனர்" என்று கூறினார்.
மேலும், சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிடுவதாக வெளிவந்து செய்தி குறித்த கேள்விக்கு, இது குறித்த வாக்காளர்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: