கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் காலமானார். அவரது படத்திறப்பு விழா இன்று திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "விவசாயிகளின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதியே மத்திய வேளாண் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனை அரசியல் உள்நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. நல்ல மசோதாவை தடுக்கும் வகையில் செயல்படக்கூடாது.
கொள்முதல் நிலையங்கள் குறித்து ஜி.கே. வாசன், "விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு என்று இலக்கு நிர்ணயம் செய்யக்கூடாது. விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துவைக்க வேண்டும்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், புலியூர் பகுதிகளில் பூ உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுபோல் இந்தப் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்குப் கட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். திருச்சி- கடலூர் இடையே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றில் 44 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அதிமுகவில் ஆட்சிக்குத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தது கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதல் குறைந்துவருகிறது. தமிழ்நாடு அரசு தொய்வின்றி அதற்கான பணிகளை மேற்கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. இதேபோல் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். நகர்ப்புறங்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் 60 முதல் 70 விழுக்காட்டினர் அணிவதில்லை. கரோனாவை முற்றிலும் தடுக்க முகக்கவசம் அணிவதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர் உலகம் முழுவதும் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அதனால் அதன் துணைவேந்தராக இருப்பவர் கல்வித் துறை, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் கல்விக் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் ஒற்றைக் கருத்துடன் செயல்பட வேண்டும். மாற்று கருத்து இருந்தால் அதை உரிய முறையில் தெரிவித்து அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலன்கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற பிரச்னை இங்கு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுபோல் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்தந்த சின்னங்களில் போட்டியிடும். அதிமுக கூட்டணியில் சின்னம் தொடர்பாக எவ்வித குளறுபடியும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் இதுவரை கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டுவந்தன. இதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. பாரதிய ஜனதா கட்சிக்கும் இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.