திருச்சி கல்லணை அருகே உள்ள சர்க்கார் பாளையத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மேரி என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. மாற்றுத்திறனாளியான ஜெயஸ்ரீ உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, ஜேம்ஸ் மேரி ஜெயஸ்ரீக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜேம்ஸ் மேரி தலையில் சீலிங் ஃபேன் விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜேம்ஸ் மேரிக்கு உடனடியாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பணம் கொடுத்தால்தான் ஸ்கேன்! மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்
ஆனால் ஜேம்ஸ் மேரிக்கு தலையில் உள்காயம் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய 500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று விதி உள்ளது.
மருத்துவமனையிலேயே விபத்து ஏற்பட்டு இருந்தாலும் அவரும் ஸ்கேன் செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. இதனால் பணமின்றி அவர் கடந்த நான்கு நாட்களாக வலியுடனும், வேதனையுடனும் மருத்துவமனையிலேயே மகளுக்கு துணையாக தங்கியிருக்கிறார்.
அரசு மருத்துவமனையின் அலட்சியம்!
மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லாததாலும் அலட்சியப்போக்காலும்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவமனை தானாக முன்வந்து அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஏழைப் பெண்ணை அலைக்கழித்துள்ளது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
மேலும், மனிதநேய நாள் கொண்டாடப்படும் இந்நாளில், திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த மனிதநேயமற்ற செயல் நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.