காவல் துறையினர் பொதுமக்கள் இடையிலான நட்புறவை வளர்க்கும் வகையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காவல் துறையினருடன் இணைந்து இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டுவந்தனர். காவல் துறையினர் எளிதில் அடையாளம் கண்டு குற்றச் செயல்களை விரைந்து தடுக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை மாமூல் வசூல், பொதுமக்களிடம் அடாவடி, வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி உள்ளிட்ட பணிகளுக்கு காவல் துறையினர் தவறாக பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது. அந்த அமைப்பினரும் காவலர்களைப்போல் காக்கி பேன்ட், ஷூ அணிந்துகொண்டு வாகனச் சோதனை, ரோந்து பணிகளில் ஈடுபட தொடங்கினர். நாளடைவில் பொதுமக்களுக்கு இதுபெரும் இடையூறாக அமைந்தது.
அந்த வகையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு முக்கியப் பங்கு இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை நீக்க வேண்டும் என்று பரவலாகக் குரல் எழுந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.
இதன் எதிரொலியாக திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் (புறநகர்), அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் ஈடுபட தற்காலிக தடைவிதித்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர நெல்லை காவல் சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விழுப்புரம், திண்டுக்கள் ஆகிய மாவட்டங்களிலும் இந்த அமைப்பினருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.