திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், "வரும் ஏப்ரல் 1ஆம் முதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. இனி விமான நிலைய ஆணையமே நேரடியாக பார்க்கிங் கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு, ஆறு மாதங்கள் கழித்து குறைபாடு இல்லாத வகையில் ஒப்பந்தம் கோரப்படும்.
அதன்படி முதல் அரை மணி நேரம் வரை பேருந்து, வேன் போன்ற வாகனங்களுக்கு 30 ரூபாயும், இதர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 48 மணி நேரம் வரை வாகனங்கள் கட்டண அடிப்படையில் நிறுத்தலாம். முன் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு மேலும் நிறுத்தலாம்.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் என்ற ஓய்விடத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தொடங்குகிறது. இதில் பிசினஸ் கிளாஸ் பயணிகள் தங்கலாம். எக்கனாமி கிளாஸ் பயணிகள் தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 900 ரூபாய் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு உணவும் வழங்கப்படும்.
அடுத்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் சுமார் ஒன்பது அடி உயரத்தில் நிறுவப்படுகிறது. பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அலுவலர்கள் மரியாதை இல்லாமல் கையாளுவதாக எழுந்துள்ள புகார் குறித்து கவுன்சிலிங் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு விமான நிலையத்தில் வண்டிகளை நிறுத்தி வந்த வாடகை ஓட்டுநர்கள், வழியனுப்புநர்கள் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.