பெரியார் 141வது பிறந்தநாள் விழா, மணியம்மை மகளிர் ஓய்வுக திறப்பு விழா, முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இன்று நடந்தது. இதில் பேராசிரியர் செல்லப்பா தலைமை வகித்தார். இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மாணவருமான திருச்சி சிவா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு, அரசியல், பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளில் பெரியார் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இங்கு பயின்ற மாணவர்களை, கல்வி உதவித்தொகை வாங்கி பயில்பவர்கள் என்று ஏளனமாக பேசிய காலம் உண்டு. ஆனால் அத்தகைய மாணவர்களுக்காகத்தான் பெரியார் இந்தக் கல்லூரியை கட்டினார்.
முந்தைய காலத்தில் நாம் இருந்த நிலையை வெளியில் கூறுவதில் தவறு இல்லை. பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பரம் போன்றவற்றால் பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர் போன்றவர்கள் தலைவராக வரவில்லை. கடின உழைப்பால்தான் அவர்கள் தலைவர்களாக வந்தார்கள். இக்கல்லூரி கட்ட நிதி கொடுத்த பெரியாரை அதற்கான விழா மேடையில் அமரவைக்காமல் எதிரே அமரவைத்திருந்தனர்.
இது குறித்து பெரியாரிடம் கேட்டபோது, நான் மேடைக்கு வருவதற்காக பணம் கொடுக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத்தான் பணம் கொடுத்தேன் என்று கூறினார். அத்தகைய பெருமைமிக்கவர் பெரியார் என்றார்.
விழாவில் சதுரங்கப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி சதுரங்க வீராங்கனை ஆண்டோவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அப்போது கல்லூரியில் பயின்ற 55 ஆண்டுகால நண்பர்கள் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிங்க: