திருச்சி: உர விலையைக் குறைக்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (ஏப்.19) போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், "50 கிலோ டிஏபி உரம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 கிலோ காம்ப்ளக்ஸ் உரம் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 கிலோ நெல் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த 944 ரூபாய்க்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமாக 44 ரூபாய் கொடுக்க வேண்டும். 100 கிலோ நெல்லுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு லாபம் தரும் விலை அதாவது 5,400 ரூபாய் கொடுப்பதாகக் கூறியது. ஆனால் கொடுப்பதோ 1,888 ரூபாய் மட்டுமே. 24 மணி நேரமும் தடையில்லாத மும்முனை மின்சாரம் தருவதாகக் கூறிய அரசு, 12 மணி நேரம் கூட விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க மறுக்கிறது. இந்தக் கொடுமையை தட்டி கேட்பதற்கு டெல்லி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பதுடன், வீட்டு காவலில் வைத்துவிடுகிறார்கள்.
கடந்த 12ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தி, டெல்லி சென்று போராட அனுமதி கோரினோம். திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகரக் காவல் ஆணையரும் கரோனா காரணமாக டெல்லி செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். திருச்சி அண்ணா சிலை அருகில் தென்புறம் 15 நபர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை என 10 நாள்களுக்கு அமைதியாக உட்கார்ந்து போராட்டம் நடத்த அனுமதி தருவதாகக் கூறினர். தற்போது அனுமதி கிடையாது என்று கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மறுத்துவிட்டார்கள்.
காவல்துறை டெல்லி செல்லவிடாமல் தடுத்ததால், விவசாயிகள் கழுத்தை அறுத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு உர விலையைக் குறைக்க வேண்டும், விவசாய விளைப்பொருள்களுக்கு இரண்டு மடங்கு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தோம்” என்றார்.
இதையடுத்து, இன்று (ஏப்.19) காலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அண்ணாமலை நகரில் உள்ள திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் விவசாயிகளை கைது செய்தனர்.