திருச்சி: மணப்பாறை அடுத்த நல்லாம்பிள்ளை கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் தான் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.
அவ்வாறு செயல்பட்டு வரும் இந்த கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை விற்பதற்காக வரும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூபாய் 35 கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும், அதற்கு நல்லாம்பிள்ளை ஊராட்சி மன்றத் தலைவர், அரசு நேரடி கொள்முதல் நிலைய அதிகாரி உட்பட மூன்று பேருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது குறித்த விசாரணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து அடுத்தகட்ட நகர்வாக அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்திற்காக காவல் துறையினரிடம் அனுமதியும் வாங்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட விவசாயிகள் ஒவ்வொருவராக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரத் தொடங்கிய நிலையில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து கொள்வதாக முடிவெடுத்து கலைந்து சென்றனர். அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கையூட்டு பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும்; காவல் துறை அனுமதியிருந்தும் ஆர்ப்பாட்டமும் நடத்த முடியவில்லை எனவும் விரக்தியின் உச்சத்தில் புலம்பியவாறே விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி படகு சவாரி கட்டணம் உயர்வு - அதிருப்தி தெரிவித்த சுற்றுலாப்பயணிகள்
இதையும் படிங்க: நல்லா தூங்குனீங்களா..! இன்று உலக தூக்க தினம்!