திருச்சி: மணப்பாறையில் பிரசித்திபெற்ற அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டின் சித்திரைத் திருவிழா கடந்த மே 1ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் விழா கடந்த 15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.
இதில், மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து கோயிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதற்கிடையில், பால்குடம் எடுத்து வந்த தெருவில் வந்த ஆம்புலன்சிற்கு பக்தர்கள் தாங்களாகவே வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். இந்த காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் கண்ட அனைவரும் இந்தச் செயலுக்கு பாராட்டுத்தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வந்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், இந்த எதிர்பாராத நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கார்த்திக், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “கடந்த 15.05.2022 அன்று எனது மனைவிக்கு திடீரென இடுப்பு வலி எடுத்ததால், 108 ஆம்புலன்சிற்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
பின்னர் விரைந்து வந்த ஆம்புலன்சில் மணப்பாறைக்கு அருகில் வரும்பொழுது ஆம்புலன்சிற்கு தாங்களாகவே வழி ஏற்படுத்திக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல உதவியாக இருந்த பால்குடம் எடுத்த பக்தர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் எனது நன்றி” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் திருத்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு