ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், லங்கோரா பகுதியைச் சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜபுரோகித் (34). இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன்படி, கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஜம்மு விமான நிலையத்திலிருந்து தனது சைக்கிள் பயணத்தை அவர் தொடங்கினார்.
இதுவரை உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா வரை பயணம் மேற்கொண்டுள்ள இவர், தற்போது தமிழ்நாடு வந்துள்ளார். அவ்வாறு திருச்சிக்கு வருகை தந்த அவருக்கு திருச்சியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 12 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்கள் என சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கத்தோடு அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - நாராயணசாமி பங்கேற்பு