இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ‘எடப்பாடி பழனிசாமி இன்று முதலமைச்சர் ஆக நீடிப்பது மோடியின் தயவில்தான். ஆளுங்கட்சி திடீரென மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. மறைமுகத் தேர்தல் நடத்துவதன் மூலம் பலவிதமான முறைகேடுகள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகள் அனைத்தும் நடப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். அத்தகைய முறைகேடுகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் தாங்கள் கைப்பற்றிவிட வேண்டும் என ஆளுங்கட்சி கருதுகிறது. இத்தகைய செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், முதியவர்கள், பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். தற்போது ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, காஷ்மீரை போல் அங்கும் வீடுகள் தோறும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மீனவர்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. இலங்கை நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருகிறார். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தால் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி இது குறித்து தெளிவாகப் பேசி முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - முத்தரசன்!