தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, கோமதி மாரிமுத்துவுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து,
"நான் ஊக்கமருத்து பயன்படுத்தவில்லை. என் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நிச்சயம் இந்த வழக்கில் நான் வெற்றிபெற்று உண்மையை நிரூபிப்பேன். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் நான் தனிப்பட்ட முறையில் எனது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் அந்த முடிவில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் வரவில்லை. எனது 'பி' மாதிரியை கேட்டுள்ளனர்.
அது தொடர்பான முடிவுகள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. நான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதால் தைரியமாக இருக்கிறேன். நான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அவர்களது முடிவுகள் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை முறியடித்து, கத்தார் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்.எனது முயற்சிக்கு மத்திய மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக நாளை டெல்லிக்கு செல்லவுள்ளார்.