திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொ.மு.ச) 50ஆவது ஆண்டு பொன் விழா மண்டல மாநாடு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதில் திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டார்.
அப்போது பேசுகையில், ' மிசா சட்டம் வந்தபோது கூட எதற்கும் கலங்காமல் தொடர்ந்து திமுகவுக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஆதரவாக இருந்த இயக்கம் தொ.மு.ச தான். இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அமோக வெற்றியைத் திமுக பெற்றது. தொண்டர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவி செய்யும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்தால் தான், எங்களுக்கு விடிவு காலம் என்று பலரும் சொல்லும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.
முதலாளி மற்றும் தொழிலாளிகளின் நலனில் அக்கறை கொள்ளும் ஒரே தொழிற்சங்கம் தொ.மு.ச தான். திமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்குப் பாடுபடக்கூடிய ஒரே இயக்கம் தொ.மு.ச தான். இந்த இயக்கத்திற்கு திமுக துணை இருக்கும். பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி அனல் மின் நிலையம் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் சக்தி கொண்ட இயக்கமாக தொமுச உள்ளது' என்றார்.
இதையும் படிங்க: ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக... மீறினால் 1 கோடி ரூபாய் இழப்பீடு!