தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக உறுப்பினருமான சண்முகம் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் பொருளாதார நிலை சீர்கெட்டு உள்ளது. தற்போதைய மத்திய நிதியமைச்சர் தடுமாற்றத்தில் உள்ளார். அவர் அச்சத்தில் இருக்கிறார். ஆனால் மற்றவர்களை அச்சப்பட வேண்டாம் என்று கூறிவருகிறார். ரயில்வே, தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களாக செயல்பட்டுவருகிறது. மக்களுக்கு இந்தத் துறை அவசியம் என்பதால் அவை அரசின் கையிலேயே உள்ளன.
ஆனால் தற்போது கார்ப்பரேட் சார்ந்த நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால் 100 நாட்கள் திட்டம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்தால் அதன் அடித்தளமான நிலம் அரசுடமை ஆக்கப்படும் என்ற விதி உள்ளது. இதை பயன்படுத்தி அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேருந்துகளைவிட ரயிலில் கட்டணம் குறைவாக உள்ளது. இத்தகைய சூழலில் மக்களுக்கு சேவையாற்றி வரும் ரயில்வேயை தனியாருக்கு மாற்றுவதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்திவருகின்றன. தொழிற்சங்கங்கள் தங்களது சுயநலத்திற்காக போராடுவதாக மக்கள் மத்தியில் எண்ணம் உள்ளது. ஆனால் அவர்கள் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போராட்டம் நடத்துகின்றனர்" என்றார்.