திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சிறு மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். குறிப்பாக சாக்கடைகளில் நீர் நிரம்பி கழிவுநீர் மாநகரச் சாலைகளில் நிரம்பி தேங்கி நிற்கும். மேலும், சிறிய மழைக்கே இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார் போன்றவை மழைநீரில் நீந்திதான் செல்ல வேண்டியிருக்கும்.
கழிவுநீரும் கலந்துவிடுவதால் வாகன ஓட்டிகள் அருவருப்புடன் சாலைகளில் பயணிக்க நேரிடும். இந்த வகையில் திருச்சியில் மூன்றாவது நாளாக நேற்று (ஜூன் 5) இரவும் மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கழிவு நீரும் மழை நீரோடு சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதையடுத்து திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்களுடன் கொட்டும் மழையில் நேரடியாக ஆய்வுசெய்தார்.
பின்னர், உடனடியாகத் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். மழை நீர் தேங்குவதற்குக் காரணமாக உள்ள குப்பை, செடிகொடிகள் போன்றவற்றையும் உடனடியாக அகற்ற அவர் அறிவுரை வழங்கினார்.
மேலும் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் நிரந்தர ஏற்பாடுகளைச் செய்யவும் அவர் அறிவுரை வழங்கினார். இரவு நேரத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வுக்கு வந்ததை அறிந்த பொதுமக்கள் பலர் வீடுகளிலிருந்து வெளியே வந்து தங்களது பகுதியிலுள்ள குறைகளைத் தெரிவித்தனர்.
இவற்றைக் கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.