திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்டத் தலைவர் சம்சுதீன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், நாம் தமிழர் கட்சி செயலாளர் சல்மான் உள்ளிட்டோர் சீர்வரிசை தட்டுடன் தப்புத் தாளத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் ஆட்சியரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, அங்கே தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சீர்வரிசை தட்டு இல்லாமல் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து சம்சுதீன் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சம்சுதீன், திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் 29ஆவது வார்டு அண்ணா நகருக்கு 30 வருடங்களாக சாலை வசதி கிடையாது. பலமுறை மனு கொடுத்தும் அது ரயில்வே துறைக்கு சொந்தமான சாலை என்று மறுக்கப்பட்டுவந்தது.
தற்போது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த சாலையை போடுவதற்கு தெற்கு ரயில்வே ரூ.3.71 கோடி தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. அப்பகுதியில் ஆயிரத்து 500 குடும்பங்களும், சுமார் இரண்டு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் உள்ளனர்.
நாங்கள் சாலை வசதி கேட்டு மனு கொடுப்பது தொடர்கதையாகவே உள்ளது. இப்பகுதிக்கு எந்த சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும், மாநகராட்சியும் அக்கறை கொண்டு சாலை அமைக்க முன்வரவில்லை. ஆகையல், சாலை அமைத்துத்தர வலியுறுத்தும் வகையில் ஆட்சியருக்கு சீர்வரிசை வழங்கி கோரிக்கை மனுவை அளித்தோம் என்றார்.