திருச்சி: கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”திருச்சி மாவட்டத்தில் +2 மற்றும் +1 பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். +2 தேர்வை 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34,392 மாணவ மாணவியரும்,
+1 பொதுத்தேர்வினை 14,088 மாணவர்களும், 16,678 மாணவிகளும் என மொத்தம் முப்பதாயிரத்து 766 மாணவ-மாணவியர்களும் பொதுத் தேர்வினை எழுத உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15லிருந்து 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். முக கவசங்கள், சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மூக்கில் அறுவை சிகிச்சை; பொதுத்தேர்வு எழுதச் சென்ற புதுக்கோட்டை மாணவி!