திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த போடுவார்பட்டிக்கு உள்பட்ட போலாச்சி ரெட்டி குட்டை, பூங்குடிப்பட்டி குளம் உள்ளது. பாசன குளமான இதிலிருந்து அப்பகுதி விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். இந்த குளங்களின் நிலப்பரப்புகளைச் சிலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
இதனால் குளத்தின் பரப்பளவு குறைந்து, வரத்து வரிகளும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்ததால் குளத்தில் தண்ணீர் தேக்காமல் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம் நிர்வாக அலுவலர்களிடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்குக் கடந்த ஆண்டு மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மொண்டிபட்டி ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மூன்று முறை அறிவுறுத்தியது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றாமலே இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 21) மணப்பாறை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மொண்டிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் முன்னிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டன.
இந்த குளத்தை நம்பி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டதன் மூலம் 40 ஆண்டுகளாக நடைபெற்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுத்த அலுவலர்களுக்கு பொதுமக்கள் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ரகுமான் கானுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கே.என்.நேரு