திருச்சி: மணப்பாறை சந்தைப் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் செல்வதற்காக ரயில் தண்டவாளத்தைக் கடந்துசெல்ல பெண் ஒருவர் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திருச்சி நோக்கிச் சென்ற ரயில் இன்ஜின் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் துவரங்குறிச்சி அடுத்த செவல்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்ற பெண் என்பதும், மணப்பாறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்த அவர் டீ குடிப்பதற்காக ரயில்வே கேட்டை கடந்ததாகவும், காது கேளாதவர் என்பதால் ரயில் வரும் சத்தத்தை அறிந்து கொள்ளாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இது குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் காலதாமத நடவடிக்கைக்குப் பாராட்டு