திருச்சி: துவாக்குடியில் உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான திருநெடுங்களநாதர் கோயிலுக்கு, இன்று (டிசம்பர் 20) தருமபுர ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கணபதிக்கு ஷோஷட கணபதி அர்ச்சனையும், மூலவரான திருநெடுங்களநாத ருத்ர திரிசதி அர்ச்சனையும், வராகி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், மங்களாம்பிகைக்கு லலிதா திரிசதி அர்ச்சனையும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட புஷ்ப அர்ச்சனையும் நடைபெற்றது.
சாமி தரிசனம் செய்த பின்னர் தருமபுரம் ஆதீனம் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, “கோயில்களில் தல விருட்சங்கள், மரங்கள், நீர்நிலைகளை அனைவரும் பாதுகாக்க வேண்டும். அதனை நாம் பராமரிக்க வேண்டும். பராமரிக்காமல் விட்ட காரணத்தினால் கொடிய நோய்களுக்கு நாம் ஆளானோம்.
தனுர் மாதத்தில் அதிகாலையில் வழிபாடு செய்வதால் சிறப்பு பலன் கிட்டும். இந்து சமய அறநிலைத்துறையிடம் கோயில்களை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வருவது குறித்த கேள்விக்கு, ”கோயில்களை யாரிடம் ஒப்படைப்பது சொல்லுங்கள், அதை முதலில் முடிவு செய்யட்டும்” என்றார்.
இதையும் படிங்க: ‘தாயிற் சிறந்த கோயில் இல்லை’ - தாயின் ஆசையை நிறைவேற்றும் தியாகமகன்