திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர், தனிப்பிரிவு காவலர்கள் கடந்த ஒரு வாரமாக 12 இடங்களில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், பழச்சாறு ஊறல்களைக் கண்டுபிடித்து அதை அழித்தும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தும்வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. மயில்வாகனன் உத்தரவின்படி மாவட்ட பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான மாவட்ட தனிப்பிரிவு தனிப்படை காவலர்கள், மணப்பாறை காவல் உள்கோட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து தணிக்கையில் ஈடுபட்டனர்.
180 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்
அப்போது வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூரில் குமார் (47), சரவணன் (43) ஆகியோர் கள்ளச்சாராய ஊறல் போட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, பழனிச்சாமி என்பவரது மிளகாய்த் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு மண் பானை, நெகிழி பேரலில் இருந்த சுமார் 180 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டறியப்பட்டு அங்கேயே தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள குமார், சரவணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
60 லிட்டர் பழச்சாறு ஊறல்
இதேபோல் வேங்கைகுறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பொம்மம்பட்டியில் பழச்சாறு விற்பனையில் ஈடுபட்ட சக்திவேலை (46) கைதுசெய்து அவரிடமிருந்த சுமார் 60 லிட்டர் பழச்சாறு ஊறலை தரையில் ஊற்றி அழித்தனர்.