திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், "இந்தியாவில் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளபோதும் கல்வி கற்றலில் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் இருந்தபோதும் உலக அளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அரசு மட்டும் தனியாக செயல்பட முடியாது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் வேண்டும்.
கல்வியின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சிக்கு முதற்படியாகும். கல்வி கற்றுவிட்டால் வேலை வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற நிலை உள்ளது. ஆனால் அது தவறு. கல்வி என்பது அறிவையும், திறனையும் வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு கருவியாகும். கல்விதான் தாரக மந்திரம். கல்வி கற்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே அனைத்து கல்வி நிறுவனங்களின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.
பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, கல்வி மட்டுமே நமது ஒரே இலக்காக இருக்க வேண்டும். 2022ஆம் ஆண்டு இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே நமது இலக்கு. இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் வறுமையையும் ஒழிக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. தாய் நாடு என்றுதான் கூறுகிறோம். தந்தை நாடு என்று கூறுவது கிடையாது.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். அனைத்து மாநிலங்களிலும் அலுவல் தொடர்பு மொழியாக உள்ளூர் மொழிதான் இருக்க வேண்டும். தொடர்பு மொழி வேறு மொழியாக இருக்கலாம். தாய்மொழி கண் போன்றது. இதர மொழிகள் என்பது கண் கண்ணாடி போன்றது. கண்பார்வை சக்தி இல்லை என்றால் கண்ணாடி அணிந்தும் வீண்.
இந்தி கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை திணிக்கக் கூடாது என்பது எனது கருத்து. 170 நாடுகளில் நமது நாட்டின் கலையான யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் சிலர் எதிர்க்கிறார்கள். மோடிக்காக யாரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டாம். அவரவர் உடல் நலனுக்காக யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகா விஷயத்தில் அரசியல் பார்க்கக்கூடாது.
உயர்ந்த சிந்தனை, உயர்ந்த கனவுகளோடு உழைக்க வேண்டும். உழைக்காமல் கனவு கண்டால் வளர்ச்சி கிடைக்காது. மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் சாதி, மதம் என எந்த பிரிவினைக்கும் மாணவர்கள் இடம் கொடுக்கக் கூடாது" என்றார்.