திருச்சி செம்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக செம்பட்டு பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக முழுமையாக மூடப்பட்டுவிட்டன. இதனால், இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தொழிலாளர்கள் 55 பேருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரி நேற்று (செப்டம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சுந்தர் நகர் பகுதியிலுள்ள தொழிற்சாலை உரிமையாளர் வீட்டு வாயில் முன் சிஐடியு திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டித் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.