திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள மருங்காபுரி மலைப்பகுதியில் இருக்கும் காட்டெருமைகள் வெள்ளனம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கம். இந்நிலையில் இதேபோல் நேற்று முன்தினம் (பிப்.04) நள்ளிரவில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன்(65) என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்களை காட்டெருமை கூட்டம் நாசமாக்கி உள்ளது.
அப்போது அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி வெள்ளையன் குடும்பத்தினர், அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை ஒன்று விவசாயி மீது எதிர் தாக்குதல் நடத்தி, தூக்கி வீசியதில் விவசாயி வெள்ளையனின் கால் உடைந்துள்ளது. இதையடுத்து அவரது கூக்குரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
அதனைத்தொடர்ந்து, காயமடைந்த விவசாயியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தாக்குதலுக்குள்ளான விவசாயியின் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து நமது 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்திடம் பேசிய விவசாயியான செல்லாயி கூறுகையில், 'வனவிலங்குகளால் தங்களுக்கும் பயிரிடும் பயிர்களுக்கும் தகுந்த பாதுகாப்பில்லை. வனவிலங்குகளை பொதுமக்களாகிய தங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அச்சம்பவத்தின்போது, விவசாய நிலத்திலிருந்து காட்டெருமைகளை விரட்ட முயன்றபோது, விவசாயி வெள்ளையன் என்பவரை காட்டெருமைகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு கால் முறிந்து விட்டது. எனவே, வனவிலங்குகளை துரத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அளிக்கவேண்டும்’ என வனத்துறைக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், அரசு அதிகாரிகள் யாரும் இதுவரையில் வந்து பாதிக்கப்பட்டவரை, சந்திக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். எனவே, விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள் தயவு செய்து வந்து பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நம்மிடையே பேசிய பாலசுப்ரமணியன், ’விவசாய நிலத்தில் விதைத்த கடலைச் செடிகளை சேதப்படுத்திய காட்டெருமைகளை விரட்ட முயன்ற விவசாயியின் கால் முறிந்துவிட்டது. இங்கு யாருக்கும் பாதுகாப்பில்லை. விவசாயத்திற்காக செய்த முதலீட்டை எங்களால் எடுக்க முடியவில்லை. காட்டெருமைகளின் தாக்குதலுக்கு ஆளாகிய விவசாயியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்’ என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கரின் பேனாவிற்கே சிலை இல்லை... கடலுக்குள் கட்டுமரம் வையுங்கள் - சீமான்