திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள அணியாப்பூர் காப்புக்காடு வனப்பகுதியான வீரமலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், மலைப் பகுதியில் மெல்ஜிரியா மரம் ஒன்றில் சேலையில் தூக்கிட்ட நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து வனத் துறையினர் அளித்த தகவலின்படி நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், மூதாட்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மணப்பாறை காவல் துறையினர் தூக்கில் தொங்கிய பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.