தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிற்சங்கத் தலைவர் கணேஷ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தராதீர்கள்' , என ஒரு எண்ணெய் நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது.
இதனால் கேஸ் நுகர்வோர் எங்கள் மீது கோபத்திலும், குழப்பத்திலும் உள்ளனர். சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு முறையான சம்பளத்தை எண்ணெய் நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும் வழங்குவதில்லை. எங்களுக்கு எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை.
பொதுமக்கள் தரும் 20 ரூபாய், 50 ரூபாய்களில் தான் எங்கள் வாழ்வாதாரமே உள்ளது. நாங்கள் அணிந்துள்ள சீருடையும் எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் எண்ணெய் நிறுவனங்கள் தருகின்றன. முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்.பி. அவர்களின் உறவினர்கள் எனப் பலர் விநியோகஸ்தர்களாக இருப்பதால், அவர்களுக்குச் சட்டம் நன்றாகத் தெரியும். எனினும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில்லை.
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களுக்கு முறையாக சம்பளம் அளித்தால் நாங்கள் ஏன்? நுகர்வோரிடம் 'டிப்ஸ்' வாங்கப்போகிறோம்? எங்களுக்கு அங்கீகாரம் அளித்து மரியாதை கொடுத்தாலே போதும்! எங்களை 'டிப்ஸ் வாங்குகிறார்கள்' என அசிங்கப்படுத்தவேண்டாம்" என்றார் வேதனையாக.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம்: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி வழக்கு