உலக அளவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 30 நாட்களாக இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்து இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு துறைகள் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து வந்த கர்ப்பிணி பெண்களுக்கு சில மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றன. இதனையடுத்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பரிசோதனை, மகப்பேறு ஆகியவற்றுக்காக அரசு மருத்துவமனையை நாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், மணப்பாறையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள், புற நோயாளிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். கர்ப்பிணி பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு தலைமை மருத்துவர் முத்து கார்த்திகேயன் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தற்போது கரோனா வைரஸ் பெருந் தொற்று நோய் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றன. இதன் காரணமாக, அரசு மருத்துவமனையை நோக்கி மீண்டும் மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
தற்போது வழக்கத்தைவிட 20 முதல் 25 சதவீதம் வரை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் வருகை அதிகரித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ள தேவையில்லை.
தங்களது எடையில் மாற்றம் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் தொலைபேசி மூலம் தலைமை மருத்துவமனையை தொடர்புகொண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின், தேவை ஏற்பட்டால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வரலாம்.
மேலும் நோய் தொற்றும் அபாயத்திலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” என அவர் ஆலோசனை வழங்கினார்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயலாற்றி வரும் மாவட்ட சுகாதாரத் துறை கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ ஊழியர்களை நியமித்து சிறப்பு கவனம் செலுத்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : அமைச்சர்களின் கார்களை வழிமறித்த துப்புரவுப் பணியாளர்கள்!