திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சமயபுரம் அருகே கொணலை சூர்யா பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டுவருகின்றன. இதில் வலையூர் ஊராட்சி ஒன்றிய 4ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் ஸ்ரீதர் என்பவர் போட்டியிட்டார். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பாலையூர், கரியமாணிக்கம், வலையூர் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளடக்கியதாகும். இதில் வலையூர் ஊராட்சியில் உள்ளாட்சிப் பதவிகளை கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் ஏலம்விடப்பட்டது. அப்போது முருகன் ஒன்றிய கவுன்சிலர் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
இதேபோல், ஊராட்சித் தலைவர் பதவியும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் ஏலம்விடப்பட்டது. இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏலம் எடுத்ததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் மீது சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இதில் அதிமுக வேட்பாளர் முருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவந்தார். ஏலம் எடுத்ததாகப் புகார் கூறப்பட்ட வலையூர் ஊராட்சியிலும் அவர் பின்னடைவை சந்தித்தார். இறுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் இரண்டாயிரத்து 511 வாக்குகள் பெற்று ஆயிரத்து 307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதையும் படிங்க: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ திடீர் மரணம்!