திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்தக் குழந்தைகளின் தந்தை சமய மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அங்கு சென்று அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அந்த வீட்டிலிருந்த 12 பேரையும் கரோனா சோதனை செய்துள்ளனர். இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை தாயும், குழந்தையையும் மருத்துவக் குழுவின் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே திருச்சியில் 39 பேர் கவனத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது ஒரு குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம் தொற்று எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க...தொற்று இருக்கா? இல்லையா? - கன்ஃபியூஸான அலுவலர்களின் அலட்சியத்தால் விழுப்புரத்தில் மாயமான டெல்லி இளைஞர்