திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது புளியஞ்சோலை சுற்றுலாதலம். கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியிலிருந்து புளியஞ்சோலைக்கு தண்ணீர் வருகிறது. அப்படி வரும் நீரானது, வழியில் உள்ள மூலிகைச் செடிகளில் மீது பட்டு வருவதால் இந்த தண்ணீரில் குளித்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.
அதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடிப்பெருக்கு , சித்திரை மாத சித்தர் குருபூஜை ஆகிய தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக பெரம்பலூர், கரூர், அரியலூர், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
தற்போது கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் காரணத்தால், தமிழ்நாடெங்கும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் புளியஞ்சோலை சுற்றுலா தலம் இன்று முதல் (ஏப்ரல் 20) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் புளியஞ்சோலைக்கு வர வேண்டாம் எனவும், மீறி வருபவர்கள் மீது வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.