திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் சுமார் 60ஐ நெருங்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் வங்கியின் பிரதான கிளை உள்ளது. இந்த கிளையில் பணியாற்றிய ஒரு பிரிவின் மேலாளர் சுப்பையா (58) என்பவர் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பரிசோதனையின் முடிவில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக இந்த வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் தாங்களாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.