திருச்சி: ஶ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு, சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.21) ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 70 சதவீதம் பேருக்கு இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா பாதிப்பு தொடங்கியது என்றார்.
தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் நாளொன்றுக்கு 36,000 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது ஓரிலக்கத்தில் பாதிப்பு குறைந்து உயிரிழப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 96 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். அதனால் 90 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளனர் என கூறினார்.
கரோனா வைரஸ் இதுவரை 10 வகையாக உருமாற்றம் அடைந்துள்ளது. மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வு அவசியம் என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் சென்னையில் நான்கு கோடி ரூபாய் செலவில் மரபணு மாற்றம் மற்றும் தடுப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் கிருமிகளின் மரபணு மாற்றங்களை உடனடியாக ஆய்வு செய்து, தகுந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
சீர்காழியை சேர்ந்த அபிநயா என்ற 13 வயது மாணவி தோல் நோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்க வலியுறுத்தி வருகிறோம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை மத்திய அரசிடம் இது சம்பந்தமாக பேசியுள்ளோம். கட்டுமானப் பணிகள் தொடங்காத நிலையிலும், மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாணவர்கள் சேர்க்கப்பட்டு 2 ஆம் ஆண்டு பயின்று வருகின்றனர் என கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 11,333 அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை வசதிகள் தேவை உள்ளன. மருத்துவமனை தேவைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் 708 நகர் நல மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் 500 மையங்களை விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?