திருச்சியில் கரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பிய மூன்றாயிரத்து 45 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த தலா ஒருவர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர்கள், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவந்தனர். தற்போது, இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதில், 32 பேருக்கு கரோனா பாதிப்பில்லையென உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை அரசு மருத்துவமனையிலிருந்த 32 பேரும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோர் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
மருத்துவமனை ஊழியர்கள் கைகளைத் தட்டி 32 பேரையும் உற்சாகப்படுத்தி விடைகொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: 22 நாள்களில் 82 லட்சம் அபராதம் வசூல்