திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேசிய மக்கள் பேரியக்கம் என்ற அமைப்பை செயல்படுத்தி வருகிறார்.
இவர், திருச்சி குறிஞ்சி நகரைச் சேர்ந்த அனுபூதி சமாஜம் நிறுவனரான சாமியார் நந்திஷா என்கிற நந்தகுமார் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ’மூன்று ஆண்டுகளாக நான் இந்த சேவை அமைப்பை நடத்தி வருகிறேன். எனது அமைப்பின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் அறிந்த சாமியார் நந்திஷா அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறி என்னை அணுகினார்.
இதை நம்பி தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலும் தலைமை தூதுவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். "மிஸ்டர் ஐ பவுண்டேஷன்" என்ற பெயரில் இந்த நியமனங்கள் நடைபெற்றது.
மேலும் இந்த பவுண்டேஷன் மூலம் ஒரு தொகுதிக்கு 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யப்படும். இதற்காக பலர் நன்கொடை வழங்க தயாராக உள்ளனர் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினார்.
இது தவிர நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 27 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு வேண்டிய செலவுகளை செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் யாருக்கும் செலவு செய்யவில்லை.
வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாய்ப்பு வழங்காமல் மோசடி செய்துவிட்டார். என்னிடமும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டார்.
இது குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளேன்’ என செல்வராஜ் தெரிவித்தார்.