தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே.20) முதல் மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செய்து கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, கரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(மே.21) மதியம் திருச்சி வருகை தந்தார்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், மாலை திருச்சி கி.ஆ.பெ அரசு விசுவநாதன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், காவல் ஆணையர் அருண், மருத்துவமனை டீன் வனிதா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முறைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் 846 சாதாரண படுக்கைகள், 450 ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் இருப்பதாக முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிதாக 100 ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள், 100 சாதாரண படுக்கைகளைப் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் இன்று (மே.21) தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய 52 படுக்கைகள், 42 சாதாரண படுக்கைகள் அடங்கிய சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அத்தோடு இங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், அவர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள என்.ஐ.டி.யில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இங்கு 360 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க கூடிய வகையில், படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, அப்துல்சமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.