திருச்சி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதனையடுத்து, வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மார்ச் 2 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே, திருச்சி மாநகராட்சியில் 11ஆவது வார்டில் திமுக சார்பில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், அதிமுக சார்பில் வழக்கறிஞர் வனிதா உள்பட 9 பேர் போட்டியிட்டனர்.
இதில் திமுக சார்பாக போட்டியிட்ட விஜயா ஜெயராஜ் வெற்றி பெற்றார். இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியடைந்த வனிதா நேற்று (ஏப்ரல்.13) திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயா ஜெயராஜின் கணவர் ஜெயராஜ் மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை பிரமாண பத்திரத்தில் மறைத்துள்ளார். இது மாநகராட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. ஆகவே அவரை தகுதி நீக்கம் செய்து, இரண்டாம் இடம் பெற்ற என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், ஜெயராஜ் மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதற்கான ஆதாரங்களையும் வனிதா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும், வரும் ஜூன் 6ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.என். நேரு